Thursday, April 26, 2007

எஜிடேரியன்??

மறுநாள் காலையில எழுந்திருக்கிறப்பவே வீடு பார்க்கணும்ங்கிற நினைப்பு மனசில தட்டுச்சு.

லேசா வளர்ந்திருந்த தாடியை எல்லாம் ஷேவ் செய்து, ட்ரிம்-ஆனேன். தாடியோட பாத்தா ரவுடின்னு நினைச்சுரக் கூடாதில்ல. பக்காவா டிரஸ் பண்ணிகிட்டு ஆபிஸ் போனேன்.

சரியா பதினொறு மணிக்கு டாண்-னு போன் பண்ணிட்டார் புரோக்கர், நம்ம டிவிஎஸ்-50 ஐ எடுத்துகிட்டு, அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேசனுக்கு ரொம்ப பக்கம், வெஸ்ட் மாம்பலம் மார்கட்டுக்கு பக்கத்திலேயே..


வீடும் புடிச்சுப் போச்சு. லாட்ஜ விடநூறு மடங்கு மேல். சரின்னுட்டு ஓனரப் பார்க்கப் போனோம். ஓனரு வீடு பக்கத்து தெருவுல இருந்தது. அதுவும் சொந்தவூடுதானாம், புரோக்கர் சொன்னான்.

'என்னப்பா வீடு புடிச்சிருக்கா' - ஓனரம்மா கேட்டாங்க.

'ஆமாங்க. என்ன வாடகை, எப்பத்தில இருந்து வரலாம்னு சொன்னீங்கன்னா, நல்லாருக்கும்'னேன்.

'இருப்பா.. பேச்சிலரின்னு சொல்லிக்கினு கீர.. கவிச்சி எல்லாம் தும்பியா'ன்னாங்க.

'கவிச்சின்னா..' -ன்னு இழுத்தபடியே புரோக்கரைப் பார்த்தேன்.

'அட என்னாப்பா கவிச்சின்னா முழிக்கிற, மாமிசம் துன்னுவியான்றாங்கோ' ன்னான்.

'நான் சாப்பிட மாட்டேனுங்க...ஆனா ரூம் மேட்டு சாப்பிடுவாருங்க' ன்னேன்.

'என்னாப்பா புரோக்கரு, இந்தப் புள்ளயாண்டான் கவிச்சி திம்பேங்கிறான், பக்கத்துல அய்யமாருங்கோ இருக்காங்க, மாமிசம் திங்காத பார்ட்டிய இஸ்துக்கினு வான்னா, இத்த கூட்டியாந்திருக்க..'ன்னு புரோக்கர்ட்ட சொல்லிட்டு,

'இந்தா பாரு தம்பி, நாங்களும் மாமிசம் துன்னுறோவங்கதான், அது எங்க சொந்த வீடுதான், அய்யமாருங்கல்லாம் பக்கத்துல இருக்காங்க கவிச்சி சமைச்சு கஷ்டப்படுத்த வேணாம்னுட்டு, நாங்க இந்த வீட்டுல வந்து இருக்கோம், நீ வேற வூடு பாத்துக்கோ'ன்னுட்டாங்க.

'இல்லங்க...நான்...' அப்படின்னு இழுத்து முடிக்கிறதுக்குள்ள, அந்த அம்மா கறாரா முடியாதுன்னுருச்சு.

புரோக்கர் என்னப் பாத்து முறைக்க, நடையைக் கட்டினோம். 'என்னா சார் நீ, இப்படி கவுத்திட்ட, சாப்பிட மாட்டேனு சொல்லிட்டு அப்புறம் போய் சமைச்சி சாப்பிடேன்.. யாரு கேக்கப்போறா'ன்னான்.

'அட போப்பா, அப்புறம் வீட்ட காலி பண்ணச் சொல்லிட்டு, அட்வான்ச தராம தகராறு பண்ணினா..உன்ன எங்க வந்து புடிக்க' ன்னு பதில் சொல்லிட்டு ஏமாற்றத்தோட ஆபிசுக்குப் போய்ச்சேர்ந்தேன்.

ம்ம்ம்...அவ்வளவுதான்..நம்ம வயிறுக்கு ஓட்டலு சாப்பாடுதான் போலன்னு நினைச்சுகிட்டேன்.

சாயந்திரம் ஒரு நாலு மணியிருக்கும், எதிர் ரூம்மேட் அசோக்-கிட்ட இருந்து போன்.

'என்னாப்பா நீ..உன்ன போன் பண்ணச் சொன்னேன்..மறந்துட்ட.. இப்பதான் என் கலிக் சொன்னான், டி.நகர்ல வீடு காலியா இருக்காம், ஒரே ரும், வித் கிச்சன் & பாத்ரூம். ஓகேவா..800 ரூபா வாடகை கேக்குறாங்க'

'பரவாயில்ல பாஸ்.. லாட்ஜ்-ல காமன் டாய்லட்/பாத்ரூமுக்கு எவ்வளவோ பரவாயில்ல..ஆனா, நான் வெஜ் சமைக்கக் கூடாதும்பாங்கள்ளா'ன்னு இழுக்க,

'அவங்க நான் வெஜிடேரியன் இல்ல, எஜிடேரியன்..முட்டை மட்டும்தான் சாப்பிடுவாங்க..நான் வெஜ்-லாம் சமைக்க மாட்டாங்க, வேணுன்னா ஓட்டல்ல சாப்பிட்டுக்குவாங்க-ன்னு சொல்லி வச்சிருக்கேன். அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க பாஸ்' அப்படின்னாரு.

'என்ன பாஸ்..அவரு ரூம் மேட்டு..'

'அட நீங்கவேற.. நீங்க எல்லா உண்மையையும் சொல்லிக்கிட்டு வீடு தேடினா, ஒரு பய உங்களுக்கு வீடு தரமாட்டான்..முதல்ல உள்ள போய் உக்காருங்க..அப்புறம் இடம் பார்த்து நடந்துக்கோங்கய்யா'ன்னார்.

ம்..மெட்ராசு வந்து பல வருசம் ஆனவரு..விவரமான ஆளுதான்..மனசுல நினைச்சுகிட்டேன்.

'சரி பாஸ்..வீக் எண்ட் போய் அட்வான்ச கொடுத்திருங்க' அப்படின்னார்.

'அட..நாளைக்கே போய் எல்லாம் கொடுத்துடுறேன், அப்புறம் மனசு மாறிடப் போறாங்க..'

'சரி நீங்களே பேசிக்கோங்க...அப்படின்னுட்டு நம்பர் கொடுத்தார்.

அப்பவே வீடு கிடைச்சா மாதிரி சந்தோசம், உடனே கூப்பிட்டு பேசி, மறுநாள் போய்ப் பார்த்து, 'பேச்சிலர்க்கு வீடு கொடுக்கோம், பேரக் காப்பாத்து தம்பி'ன்னாங்க.

சரிங்கோ-ன்னுட்டு வூடு புக ரெடியானோம்!

பாத்திர பண்டங்கள் எல்லாம் வாங்கி, சமையலுக்கான முன்னேற்பாடோட கிச்சன எல்லாம் ரெடி பண்ணினோம்.

ரங்கநாதன் தெருவில இருந்த ஒரு புத்தகக் கடையில 'மல்லிகா பத்ரிநாத்'- எழுதுன சில சமையல் புத்தகங்களும் வாங்கிக்கிட்டோம்..

அது ஒரு கனாக்காலம் மாதிரி, சமைச்சு சாப்பிடுற கனவோட தூங்கப் போனோம்.

3 comments:

')) said...

கடோத்கஜா,

பதிவைப் பார்த்தேன். படித்தேன், ரசித்தேன்.

நல்லா இருக்கு. வாழ்த்து(க்)கள்.

')) said...

நன்றி துளசிக்கா. உங்க பதிவுலாம் படிச்சுருக்கேன். எப்பவாச்சும், அனானியா வந்து கமெண்டு போடுவேன். இப்பதான் ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன, இனிமே என் பேரிலேயே கமெண்ட் எழுதுவேன். அப்பப்ப வாங்க..

')) said...

நளபாக சக்கரவர்த்தி ஆக வாழ்த்துக்கள்.