Thursday, December 27, 2007

எமெர்ஜென்சி ரொட்டி சுடுவது எப்படி?

அடடா.. ரொம்ப நாளா தூங்கப் போயிட்டேனுங்கோ, (அதுக்காக 'கும்பகர்ணன்'னு பேர மாத்திக்கச் சொல்லாதீங்கோ). திடிர்னு வந்து பாத்தா, வருசக் கடைசியில ஒரே அவார்டு கொடுக்கிற அறிவிப்புகளா வந்துக்கினு இருக்கு. ஒரு பக்கம் சர்வேசரு போட்டி போட்டுத்தாக்குறாரு, இன்னொரு பக்கம் தமிழ்மணம்..இன்னொரு பக்கம் சங்கமம்னு..சூப்பரு போங்க.

இந்த வருசம்தான் ஒன்னும் கிழிக்கல, மத்தவங்க போட்ட சாப்பாட்ட சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கியாச்சு..

அடுத்த வருசமாவது, நிறைய ரெசிப்பி குடுத்து உங்க வயிறு வாழ்த்த வைக்கோணும்னு நியு இயர் தீர்மானம் எடுக்கலாம்னு இருக்கேன்..ஆவ்வ்...அதுக்குள்ள கொட்டாவி வருதே. அப்பப்ப பின்னூட்டம் இட்டு, எழுப்பிக்குனு இருங்கோ..அல்லன்னா, திருப்பி தூங்கப் போயிருவேன், அப்புறம் உங்க வவுருக்கு நல்ல சாப்பாட்டு ரெசிப்பி கிடைக்காது பாத்துக்கோங்க...ஹி..ஹீ..

கொசுறா நண்பர் 'புதுகைத் தென்றல்' ஒரு ரெசிப்பி பின்னூட்டத்தில சொல்லியிருக்காரு, நான் இன்னும் செய்ஞ்சு பார்க்கல.. சிம்பிளா இருக்கு..எங்காவது 'கேம்பிங்க்' போகையில, இந்தமாதிரியான அயிட்டங்கள் ஈஸியா கை கொடுக்கும்னு நினைக்கிறேன்..

அரிசி ரொட்டி

தேவையானவை:

அரிசி மாவு : 250 கிராம்

வெங்காயத் தாள் : 2 கட்டு

ப.மிளகாய், உப்பு = சுவைக்கேற்ப

செய்முறை:
வெங்காயத் தாளை சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொண்டு மேற்சொன்ன அத்தனையையும் கலந்து சிறிது தண்ணிர் விட்டு பிசைந்து, வாணலியில் தட்டி முடி சிருந்தணலில் ரொட்டி போல் சுட்டால் தொட்டுக் கொள்ள கூட ஏதும் வேண்டாம்

Rice Rotti

Ingredients

Rice Flour - 250 Gm

Onion Leaves - 2 bundles

Sufficient Green Chillies & Salt.

How to Make?

1. Clean the onion leaves and slice them into small pieces.

2. Chop the onions into small pieces.

3. Mix them well with the Rice flour, add little water too.

4. Flat the mix and put it in hot pan. Add little oil, if required. Your rotti is Ready to eat now!

Sunday, July 8, 2007

எட்டிய எட்டு - நானானிக்கு நன்னி!!!

சாப்பிட்டுட்டு சாப்பிட்டுட்டு தூங்கிக்கினு இர்ந்தவனப் புடிச்சு இழ்த்து எட்டுப் போடச் சொல்லிக்கினாங்கபா, நம்ம நானானியம்மா?

ஏதோ கொஞ்ச நாள் கம்பெனி செலவுல அமெரிக்கா போய்ட்டுவாப்பா அனுப்பி வைச்சாங்கோ. அப்ப அங்கோ பொழுது போகாமா இருக்கறச்ச, நம்ம ரூம்மேட்டு சொல்லி தமிழ்மணத்துல எட்டிப் பாத்தேனுங்கோ.. கொஞ்சம் இண்ட்ரஸ்டா இருக்கச்சொல்லோ, நாமளும் எதுனா எழுதனும்னு தோணிச்சு.

மனசுல இருக்கிற ஆசய, ரூம்மேட்டுக்கிட்ட உளறுனப்போ, நீ என்னடா எழுதுவே.. நல்லா சாப்பிடத்தாண்டா தெரியும், அதப் பத்தி கூட எழுதலாம்'னு ஐடியா கொடுத்தான். அந்த ஜோருல தொடங்குனது. ம்ம்..ஆனா சாப்பிடறுதுல இருக்குற சுறுசுறுப்பு, எழுத்துல வர்ர மாட்டேங்குதேபா?

அதான் ஆரம்பிச்ச வேகம், அப்புறம் இல்லாம சும்மா கிடக்குது. ரொம்ப நாளாச்சே, ஏதாவது எழுதலாம்னு உள்ள வந்தா, நானானியம்மா எட்டு போடக் கூப்பிட்டுருக்காங்க்கோ..லைசென்ஸே நாம எட்டுப் போடாம வாங்கினது, இங்க வந்து எட்டுப் போடச்சொல்றாங்களே..ம்ம்..

இன்னொருவிதமா யோசிச்சா, அட, இப்படி கூட எழுத ஐடியா குடுக்குறாய்ங்களே, நம்மளயும் மனுசனா மதிச்சு கூப்பிட்டதுக்கு ஒரு நாலு வார்த்தயாவது எழுத வேணாம்.. பெரியவங்கோ நிறையப் பேரு என்னன்னவோ எழுதியிருக்காங்கோ, அதுமாதிரி..பெரிய விசயமெல்லாம் நம்ம கிட்ட ஏதுமில்லைங்கோ, நமக்குத் தோணினத ஏதோ எழுதியிருக்கேன், பெரிய மனசு பண்ணி படியுங்க.


  1. செல்லப்பிள்ளை சரவணன் : அட..நாந்தானுங்க அது. அண்ணன், அக்கா எல்லாருக்கும் ரொம்பப் புடிச்ச குட்டிப்பையர். அப்போ, குண்டு சட்டி கணக்கா 'பொதுக்..பொதுக்'னு இருந்ததால எல்லோருக்கும் ரொம்பப் புடிக்குமாம். ம்..ம்.. அப்பவே சாப்பிட ஆரம்பிச்சது..இன்னைக்கும் ஒரு புடி புடிச்சுகிட்டு இருக்கிறதால, தொப்பையப்பனுக்குப் போட்டியா தொப்பை வளந்துகிட்டு இருக்கு.



  2. அன்பு நண்பன் : ரெண்டாங்கிளாஸ் படிக்கிறப்போ ரெண்டு பிரண்ட்ஸ் ரொம்ப நெருக்கமானவங்க. பாபுன்னு ஒரு குண்டுப் பையன், சரியான மிரட்டல் பேர்வழி. தினமும் காலைல வந்த உடனே, என்னோட குச்சி பாக்ஸ அவங்கிட்ட காட்டணும். நீளமா, புதுக்குச்சு வாங்கியிருந்தன்னா, அத எடுத்து சுக்குச்சுக்கா ஒடைச்சு கையில கொடுப்பான். அழுகையா வரும், ஆனாலும், தினமும் அவங்கிட்ட பாக்ஸ காட்டனும், இல்லன்னா, கிள்ளி வுடுவான். வலிக்கும், அழவும் முடியாது, டீச்சர்கிட்ட சொல்லுவேன்னா, வெளில வந்து அடிப்பேம்பான். முதப் பரீட்சை முடிஞ்சு, ரேங்க் வரிசைப்படி உக்கார வச்சுட்டாங்க. அதுலதான், அவங்கிட்ட இருந்து தப்பிச்சேன். அப்ப, பக்கத்துல வந்தது வெங்கடேஷ்னு ஒரு ஒல்லிப்பிச்சான். நல்ல கலரா இருப்பான், கண்ணாடி போட்டிருப்பான்.ஏப்பவும் சிரிச்சமாத்ரியே இருப்பான். பயங்கர தோஸ்த்தாயிட்டான். அப்படியே பாபுவுக்கு எதிர். அவன்கிட்ட பாபு பத்திச் சொன்னேன். அவங்க அப்பா, போலீஸ்காரர். பாபுவ கூப்பிட்டு , 'சேட்டை எதுனா பண்ணினா, எங்கப்பா போலிஸு, அவர்கிட்ட சொல்லிடுவேன்'ன்னு மிரட்டினான் பாருங்க, அதுக்கப்புறம் பயங்கர மரியாதையாயிட்டான். ஆனா, ஒல்லியா இருந்ததினாலோ என்னவோ வெங்கடேஷுக்கு அடிக்கடி உடம்புக்குச் சரியில்லாம போகும். அப்பப்போ வருவான், அப்புறம் வருவதும் நின்று போனது. அப்புறம் டீச்சர்தான் ஒரு நாள் சொன்னாங்க, அவன் ஏதோ எலும்புருக்கி நோயால இறந்துட்டான்னு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. முதலில் என்னை நேசித்த என் இனிய நண்பன், இப்பவும் அவன் முகம் கண்ணுக்குள் நிற்கிறது.



  3. காசேதான் கடவுளடா: என்னோட சின்ன வயசுல எல்லாம், எங்க குடும்பம் வசதியான குடும்பம் கிடையாது. ஆம்பிளைப் பிள்ளைங்களை படிக்க வைக்கணும்னுட்டு, அக்காவெல்லாம், ஆறாவதுக்கு மேல படிக்க வைக்க முடியலை. அக்காவோ, அம்மாவோ என்னை ஸ்கூல்லுக்கு விடுறப்போ, அட்வைஸ் பண்ணுவாங்க. கண்ணுல பாக்கிறத எல்லாம் வேணும்னு கேக்கக் கூடாது, அப்பா கஷ்டப்படுறாங்க. நாம ரொம்ப தொந்திரவு கொடுக்கக் கூடாது..அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணுவாங்க. ஓரளவுக்குக் கேட்டிருக்கேன்னுதான் நினைக்கிறேன். அப்பாவும் அடிக்கடி சொல்லுவாங்க, 'பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியலடா, உங்களப் படிக்க வைக்கிறது பின்னாடி அவங்களுக்கு நீங்க உதவணும்டா'ன்னு. அப்பாவின் விருப்பமும், வளர வளர காசோட அருமையும், அது கட்டிப் போட்ட தருணங்களும் காசு சம்பாதிச்சு, இவங்கள எல்லாம் நல்லா வச்சுக்கணும் எண்ணச் சொல்லிச்சு. இப்ப ஓரளவுக்கு அதை நோக்கிப் போய்கிட்டு இருக்கேன்னுதான் சொல்லணும்.



  4. கண்ணடிச்சா தப்பா? : ப்ளஸ் ஒன் படிக்கையிலன்னு நினைக்கிறேன். கூடப் படிக்கிற பசங்கள்ளாம், சைட்...சைட்..னு பேசிப்பாங்க. நமக்கு என்னவோ அது கெட்ட வார்த்தைன்னு படும். அப்படி ஒரு நாள் பேசிக்கிறப்பதான், 'மாப்பிள்ளை பெஞ்ச்' பையன் ஒருத்தன் என்னப் புடிச்சு கலாய்ச்சுகிட்டு இருந்தான். 'நீ சைட் அடிப்பியாடா?'ன்னான். 'ஆ..அடிப்பேனே'ன்னேன். ஆச்சரியமா என்னப் பார்த்துட்டு, 'சைட்-டுனா என்னனு தெரியுமாட உனக்கு?'ன்னான். 'ஆ..பொண்ண்ங்களைப் பார்க்கிறதுதானே'ன்னேன். 'அதானே, பார்த்தேன். மடையா, பாக்குறதுக்குப் பேரு லுக்கு வுடுறது. 'சைட்' அடிக்கிறதுனா, லுக்குவுடுற பொண்ணு உன்னப் பாக்கிறச்ச, நீ கண்ணை இமைக்கனும், அதுக்குப் பேருதான் சைட் அடிக்கிறது. பண்ணியிருக்கியான்னான். 'அய்யோ' - அப்படின்னேன். இவன்கிட்ட இப்படி பேசி ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் இருக்கும். பக்கத்து ஊருக்குப் போறதுக்காக, அப்பா கூட பஸ் ஸ்டாண்ட் நோக்கிப் போய்கிட்டு இருந்தேன். வழக்கமா, ஸ்கூலுக்குப் போறப்போ வர்ர பொண்ணு எதிர்த்தாப் போல வந்துகிட்டு இருந்தா. வழக்கமா ஸ்கூலுக்குப் போறப்போ, லுக்-கு விட்டுருக்கேன். வழக்கமா ஸ்கூல் யூனிபார்மில வர்ர பொண்ணு, இன்னைக்கு கலர் டிரஸ்ல. அப்ப பாத்துதான் நம்ம ஃபிரண்டோட சைட் விளக்கம் நினைவுக்கு வந்துச்சு. அப்பாவ மெல்ல முன்ன போகவிட்டுட்டு, பின்னாடி நடந்தேன். 'ம்..ம்.. எப்படியும் என்னைப் பார்ப்பா, அப்போ கண்ணடிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன். கை,காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. ஆனாலும், அடிச்சுடணும்னு முடிவு பண்ணினேன். சரியா, அப்பாவ க்ராஸ் பண்ணினதும், என்ன பார்த்தா. எங்கயிருந்து எனக்கு தைரியம் வந்ததோ தெரியாது, அவள் பார்த்த சமயம், டபக்-குன்னு என்னோட இடக்கண்ணை அடிச்சேன். ஒரு செகண்ட் அந்தப் பொண்ணு நின்ன மாதிரி தோணுச்சு, ஆச்சரியமா இல்லை மிரட்சியா என்ன எக்ஸ்பிரஸன்னு தெரியல, கண்ணை நல்ல அகலமா விரிச்சுப் பார்த்தா. அவ்வளவுதான், எனக்குள்ள இருந்த தைரியம் எங்க போச்சுன்னு தெரியலை. வேகமாப் போய் அப்பாவோட ஜாயின் பண்ணிகிட்டேன். அப்புறம் பஸ்ல போறப்ப எல்லாம், ஒரே பயம். அந்தப் பொண்ணு இருப்பதும் எங்க தெருதான், எங்க வீடும் தெரியும், எங்கயாவது வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவாளோன்னு பயம் வேற. வூட்டுக்கு வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிரக் கூடாது, அப்புறம் குடும்பத்துக்கே கெட்ட பெயராயிடும்..அண்ணன் அக்கா கண்ணில எல்லாம் எப்படி முழிப்பது..போகிற வழியில இருக்கிற சாமியெல்லாம் கும்பிட்டு, மன்னிப்பு கேட்டேன். நிசமாங்க, அதுதான் நா அடிச்ச முதலும்,கடைசியுமான சைட்டு. இப்ப நினைச்சாலும், நானா அப்படியிருந்தேன்னு இருக்கு. இப்ப சைட் அடிக்கிறதில்லையான்னு கேக்காதீங்க, ஜஸ்ட் லுக்குதான் வுடுறேன். :)



  5. ஊத்தப்பம்: என்னமோ எனக்குப் பிடிச்ச உணவு அயிட்டம்னு நினைச்சுக்காதீங்கோ! காலேஜ்-ல பசங்க வச்ச பட்டப் பெயரு. உருட்டுக்கட்டை மாதிரி இருந்ததால அந்தப் பேரு.

இன்னும் மூணு இருக்கா? இதுவே பெரிசா எழுதிட்டமாதிரி இருக்கு. அப்புறம் மிச்சத்தையும் எழுதுறேன்.

Friday, April 27, 2007

என்ன பண்ண போறேன்?

என்னடா இது கதை எழுதுற மாதிரி எழுதிகிட்டு இருக்கானே? ப்ளாக்-கோட தலைப்ப பார்த்தா 'சாப்பாட்டுராமன்'-னு இருக்கே? அப்படின்னு யோசிக்கிறீயளா?

சாப்பாட பத்திதானுங்கோ எழுதப் போறேன். பேச்சிலரா இருந்துக்கிட்டு, ரெசிப்பீக்கு அலைஞ்சு, திரிஞ்சது ஞாபகத்தில இருக்கிறச்ச, அதக் கொஞ்சம் தொட்டுப் போலாம்னுதான் கொஞ்சம் அதப் பத்தி பேசினேன்.

இனிமே ரெசிப்பிக்கு தாவிட வேண்டியதுதான்.

எல்லா ரெசிப்பியும் சொந்தமானது இல்ல, இங்கே அங்கே கேட்டது, கற்றது, சுட்டதுதான்..

யாம் பெற்ற சுவை இவ்வையகம் பெறட்டும் அப்படிங்கிற நல்லெண்ணெய்ல....ச்சீ...சீ... நல்லெண்ணத்துல இங்கே சில பரிமாறல்கள் தொடரும்னு சொல்லிக்கிறேன்..

அதுமட்டுமல்ல, நம்ம தோஸ்த்துங்க எல்லாம், நல்லா சமைக்கிறீங்களே, ஒரு நா சமைச்சுட்டு கூப்பிடேன் , வாரோம்..அப்படின்னு அன்புத் தொந்தரவு ( :))) தாங்க முடியலை.

அதுல இருந்து விடுபட, இந்த ப்ளாக்-ல நாம கேட்ட,கற்ற, சுட்ட ரெசிப்பிக்களை போட்டு, லிங்க்- கொடுத்து, வேணுங்கிறப்ப பாத்து பண்ணிக்கோங்கடான்னு சொல்லிரலாம் பாருங்க..

அதுக்குத்தான் இது... நீங்க கூட ரெசிப்பி அனுப்பலாம்..

செய்ஞ்சு பாத்துட்டு, கருத்தோட உங்க பெயர் விளங்கச் செய்வேனுங்கோவ்!

Be Ready! (இப்படி சொன்னா, நம்ம பாசக்கார பயலுவ.. பீர் அடிக்கச் சொல்றாருன்னுட்டு பாட்டில ஓப்பன் பண்ணப் போயிடுவானுங்க, நான் சொன்னது அந்த அர்த்ததில இல்லைங்கண்ணு, தயாரா இருங்கன்னு சொல்லுக்கினு, இப்ப ஜகா வாங்கிக்கிறேன்.

Thursday, April 26, 2007

எஜிடேரியன்??

மறுநாள் காலையில எழுந்திருக்கிறப்பவே வீடு பார்க்கணும்ங்கிற நினைப்பு மனசில தட்டுச்சு.

லேசா வளர்ந்திருந்த தாடியை எல்லாம் ஷேவ் செய்து, ட்ரிம்-ஆனேன். தாடியோட பாத்தா ரவுடின்னு நினைச்சுரக் கூடாதில்ல. பக்காவா டிரஸ் பண்ணிகிட்டு ஆபிஸ் போனேன்.

சரியா பதினொறு மணிக்கு டாண்-னு போன் பண்ணிட்டார் புரோக்கர், நம்ம டிவிஎஸ்-50 ஐ எடுத்துகிட்டு, அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேசனுக்கு ரொம்ப பக்கம், வெஸ்ட் மாம்பலம் மார்கட்டுக்கு பக்கத்திலேயே..


வீடும் புடிச்சுப் போச்சு. லாட்ஜ விடநூறு மடங்கு மேல். சரின்னுட்டு ஓனரப் பார்க்கப் போனோம். ஓனரு வீடு பக்கத்து தெருவுல இருந்தது. அதுவும் சொந்தவூடுதானாம், புரோக்கர் சொன்னான்.

'என்னப்பா வீடு புடிச்சிருக்கா' - ஓனரம்மா கேட்டாங்க.

'ஆமாங்க. என்ன வாடகை, எப்பத்தில இருந்து வரலாம்னு சொன்னீங்கன்னா, நல்லாருக்கும்'னேன்.

'இருப்பா.. பேச்சிலரின்னு சொல்லிக்கினு கீர.. கவிச்சி எல்லாம் தும்பியா'ன்னாங்க.

'கவிச்சின்னா..' -ன்னு இழுத்தபடியே புரோக்கரைப் பார்த்தேன்.

'அட என்னாப்பா கவிச்சின்னா முழிக்கிற, மாமிசம் துன்னுவியான்றாங்கோ' ன்னான்.

'நான் சாப்பிட மாட்டேனுங்க...ஆனா ரூம் மேட்டு சாப்பிடுவாருங்க' ன்னேன்.

'என்னாப்பா புரோக்கரு, இந்தப் புள்ளயாண்டான் கவிச்சி திம்பேங்கிறான், பக்கத்துல அய்யமாருங்கோ இருக்காங்க, மாமிசம் திங்காத பார்ட்டிய இஸ்துக்கினு வான்னா, இத்த கூட்டியாந்திருக்க..'ன்னு புரோக்கர்ட்ட சொல்லிட்டு,

'இந்தா பாரு தம்பி, நாங்களும் மாமிசம் துன்னுறோவங்கதான், அது எங்க சொந்த வீடுதான், அய்யமாருங்கல்லாம் பக்கத்துல இருக்காங்க கவிச்சி சமைச்சு கஷ்டப்படுத்த வேணாம்னுட்டு, நாங்க இந்த வீட்டுல வந்து இருக்கோம், நீ வேற வூடு பாத்துக்கோ'ன்னுட்டாங்க.

'இல்லங்க...நான்...' அப்படின்னு இழுத்து முடிக்கிறதுக்குள்ள, அந்த அம்மா கறாரா முடியாதுன்னுருச்சு.

புரோக்கர் என்னப் பாத்து முறைக்க, நடையைக் கட்டினோம். 'என்னா சார் நீ, இப்படி கவுத்திட்ட, சாப்பிட மாட்டேனு சொல்லிட்டு அப்புறம் போய் சமைச்சி சாப்பிடேன்.. யாரு கேக்கப்போறா'ன்னான்.

'அட போப்பா, அப்புறம் வீட்ட காலி பண்ணச் சொல்லிட்டு, அட்வான்ச தராம தகராறு பண்ணினா..உன்ன எங்க வந்து புடிக்க' ன்னு பதில் சொல்லிட்டு ஏமாற்றத்தோட ஆபிசுக்குப் போய்ச்சேர்ந்தேன்.

ம்ம்ம்...அவ்வளவுதான்..நம்ம வயிறுக்கு ஓட்டலு சாப்பாடுதான் போலன்னு நினைச்சுகிட்டேன்.

சாயந்திரம் ஒரு நாலு மணியிருக்கும், எதிர் ரூம்மேட் அசோக்-கிட்ட இருந்து போன்.

'என்னாப்பா நீ..உன்ன போன் பண்ணச் சொன்னேன்..மறந்துட்ட.. இப்பதான் என் கலிக் சொன்னான், டி.நகர்ல வீடு காலியா இருக்காம், ஒரே ரும், வித் கிச்சன் & பாத்ரூம். ஓகேவா..800 ரூபா வாடகை கேக்குறாங்க'

'பரவாயில்ல பாஸ்.. லாட்ஜ்-ல காமன் டாய்லட்/பாத்ரூமுக்கு எவ்வளவோ பரவாயில்ல..ஆனா, நான் வெஜ் சமைக்கக் கூடாதும்பாங்கள்ளா'ன்னு இழுக்க,

'அவங்க நான் வெஜிடேரியன் இல்ல, எஜிடேரியன்..முட்டை மட்டும்தான் சாப்பிடுவாங்க..நான் வெஜ்-லாம் சமைக்க மாட்டாங்க, வேணுன்னா ஓட்டல்ல சாப்பிட்டுக்குவாங்க-ன்னு சொல்லி வச்சிருக்கேன். அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க பாஸ்' அப்படின்னாரு.

'என்ன பாஸ்..அவரு ரூம் மேட்டு..'

'அட நீங்கவேற.. நீங்க எல்லா உண்மையையும் சொல்லிக்கிட்டு வீடு தேடினா, ஒரு பய உங்களுக்கு வீடு தரமாட்டான்..முதல்ல உள்ள போய் உக்காருங்க..அப்புறம் இடம் பார்த்து நடந்துக்கோங்கய்யா'ன்னார்.

ம்..மெட்ராசு வந்து பல வருசம் ஆனவரு..விவரமான ஆளுதான்..மனசுல நினைச்சுகிட்டேன்.

'சரி பாஸ்..வீக் எண்ட் போய் அட்வான்ச கொடுத்திருங்க' அப்படின்னார்.

'அட..நாளைக்கே போய் எல்லாம் கொடுத்துடுறேன், அப்புறம் மனசு மாறிடப் போறாங்க..'

'சரி நீங்களே பேசிக்கோங்க...அப்படின்னுட்டு நம்பர் கொடுத்தார்.

அப்பவே வீடு கிடைச்சா மாதிரி சந்தோசம், உடனே கூப்பிட்டு பேசி, மறுநாள் போய்ப் பார்த்து, 'பேச்சிலர்க்கு வீடு கொடுக்கோம், பேரக் காப்பாத்து தம்பி'ன்னாங்க.

சரிங்கோ-ன்னுட்டு வூடு புக ரெடியானோம்!

பாத்திர பண்டங்கள் எல்லாம் வாங்கி, சமையலுக்கான முன்னேற்பாடோட கிச்சன எல்லாம் ரெடி பண்ணினோம்.

ரங்கநாதன் தெருவில இருந்த ஒரு புத்தகக் கடையில 'மல்லிகா பத்ரிநாத்'- எழுதுன சில சமையல் புத்தகங்களும் வாங்கிக்கிட்டோம்..

அது ஒரு கனாக்காலம் மாதிரி, சமைச்சு சாப்பிடுற கனவோட தூங்கப் போனோம்.

Tuesday, April 24, 2007

வீடு கிடைச்சுதா?

எப்படியோ ரூம் மேட்டுகிட்ட ஒரு வாரம் டைம் வாங்கியாச்சு. அதுக்குள்ள வீடு கிடைக்கணுமே! மெட்ராசு ஊரில பேச்சிலர் பசங்களுக்கு வீடு கிடைக்கிறதுன்னா, குதிரை கொம்புதானுங்க.

வீடு வச்சிருக்கிற ஓனரு பசங்க பேச்சிலரா இன்னொரு ஊரில வூடு கிடைக்காம திண்டாடினா புரிஞ்சிப்பாங்களா?ன்னு எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.

நாலு நாளு புரோக்கருக்கு போன் போட்டு பேசின செலவுதானே தவிர, வீடு ஒன்னும் கிடைக்கிற மாதிரி தெரியல.

ரூம் மேட்டு, ஆபிசு வேலையா பெங்களூருக்குப் போனவரு, அங்கிருந்து 'என்னலே, வூடு கிடைச்சுதா?' ன்னு கேட்டாரு. 'ம்ம்ம்னு இழுத்தேன்.

'இன்னும் மூணு நாளுதாம்ல இருக்கு. அதுக்குள்ள கிடைக்கலேன்னா, லாட்ஜுக்கு அடுத்த மாச வாடகை அட்வான்சா குடுக்கோணும், பாத்துக்கோ'ன்னுட்டு போன வச்சுட்டாரு.

அவரு வச்ச உடனே, புரோக்கரப் போனப் போட்டு புடிச்சேன். 'என்ன புரோக்கரு நீ..ஒரு வீடு பாத்து தரமுடியல. நூறூ ருபா டோக்கன் அட்வான்ச் மட்டும் வாங்கிக் கிட்ட'ன்னு தாறுமாறா கேக்க ஆரம்பிச்சேன்.

'அண்ணே கோச்சுகிடாதீக, நாளைக்கு 11.00 மணிக்கு, வெஸ்ட் மாம்பழத்துல ஒரு வீட்ட முடிச்சிரலாம், எல்லாம் பேசிட்டேன் நான்', அப்படின்னான்.

'மவன..நாளைக்கும் எதாவது கத சொன்ன, உனக்கு இருக்குடி' அப்படின்னு முனகிட்டே போன வச்சேன்.

'என்னா பாஸ்..முணுமுணுக்கிறீங்க' - அப்படின்னு கேட்டுகிட்டே தோளைத் தட்டினாரு, எதிர்த்த ரூம் நண்பர் அசோக்.

'இல்ல சார், வீடு பாத்து போகலாம்னு, நானும், ரூம்மேட்டும் முடிவு பண்ணினோம், ஆனா ஒன்னும் தகைய மாட்டேங்குது, அதான் புரோக்கர் பயகிட்ட திட்டினேன்'

'ஓ..அப்படியா..உங்க ரூம்மேட்டு போனவாரம் எங்கிட்ட கூட கேட்டாருன்னுட்டு, என்னோட கலிக்-கிட்ட சொன்னேன். அவரோட மாமாவோட ஒரு வீடு இருக்கிறதா சொன்னாரு. எதுக்கும் நீங்க எனக்கு நாளைக்குக் காலையில போன் பண்ணுங்க. நான் கேட்டுச்சொல்றேன்' னார்.

'சூப்பருங்க, கண்டிப்பா பண்றேன்'-னு சொல்லிகிட்டே சக லாட்ஜ் நண்பர்களைப் பார்க்கப் போனோம்.

'நாளைக்கு' என்ன நடந்ததுங்கிறத, நாளைக்குச் சொல்லட்டுமாங்கோ?

அட சாப்பாட்டு ராமா?

பேச்சிலரா இருந்து, சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற அனுபவம் இருக்கே.. அது ஒரு ஜாலியான சோகம்ங்க. சும்மாச் சும்மா ஓட்டலுக்குப் போயி, என்னத்தச் சாப்பிடன்னு யோசிச்சு, கடைசியில பொங்கல் வடை, மசால் தோசைன்னே காலம் போய்கிட்டு இருந்துச்சு.

அப்பதான், திடிர்னு ஒரு ஞானோதயம் வந்துச்சு. எதுக்குடா இப்படி லாட்ஜில தங்கிக்கிட்டு, ஓட்டலுக்கும் தண்டம் அழுது லாட்ஜுக்கும் தண்டம் அழுது, நாளக் கடத்திக்கிட்டு இருக்கிறதுக்கு, ஒரு வீடு பார்த்து, சமைச்சு சாப்பிட ஆரம்பிக்கலாம்னு திட்டம் போட்டோம்.

வீடு பார்க்கிறது அவ்வளவு சுலபமில்லையே. பேச்சிலர்-னா எவன் வீடு கொடுப்பான்கிற கதையாப் போயிடுச்சு. தேடு தேடுன்னு தேட ஆரம்பிச்சோம்.

நம்ம ரூம் மேட்டு, ரொம்ப டென்சனாயிட்டாரு. அவருக்கு எதுவுமே எடுத்தவுடனே நடக்கணும், இவ்வளவு இழுஇழுத்துதா..மனுசன் கோவமாயிட்டாரு..

'அட சாப்பாட்டு ராமா... உன் வயிறுக்காக இவ்வளவு கஷ்டப்பட முடியாதுடா'ன்னுட்டு இழுக்க ஆரம்பிச்சார்.

சரிடா மச்சி.. இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம், அதுக்குள்ள கிடைக்கலேன்னா, ஐடியாவ டிராப் பண்ணிரலாம்னு முடிவெடுத்தோம்.

வீடு கிடைச்சுதா... கொஞ்சம் வெயிட் செய்யண்டி..அடுத்தப் பதிவுக்கு!