Friday, April 27, 2007

என்ன பண்ண போறேன்?

என்னடா இது கதை எழுதுற மாதிரி எழுதிகிட்டு இருக்கானே? ப்ளாக்-கோட தலைப்ப பார்த்தா 'சாப்பாட்டுராமன்'-னு இருக்கே? அப்படின்னு யோசிக்கிறீயளா?

சாப்பாட பத்திதானுங்கோ எழுதப் போறேன். பேச்சிலரா இருந்துக்கிட்டு, ரெசிப்பீக்கு அலைஞ்சு, திரிஞ்சது ஞாபகத்தில இருக்கிறச்ச, அதக் கொஞ்சம் தொட்டுப் போலாம்னுதான் கொஞ்சம் அதப் பத்தி பேசினேன்.

இனிமே ரெசிப்பிக்கு தாவிட வேண்டியதுதான்.

எல்லா ரெசிப்பியும் சொந்தமானது இல்ல, இங்கே அங்கே கேட்டது, கற்றது, சுட்டதுதான்..

யாம் பெற்ற சுவை இவ்வையகம் பெறட்டும் அப்படிங்கிற நல்லெண்ணெய்ல....ச்சீ...சீ... நல்லெண்ணத்துல இங்கே சில பரிமாறல்கள் தொடரும்னு சொல்லிக்கிறேன்..

அதுமட்டுமல்ல, நம்ம தோஸ்த்துங்க எல்லாம், நல்லா சமைக்கிறீங்களே, ஒரு நா சமைச்சுட்டு கூப்பிடேன் , வாரோம்..அப்படின்னு அன்புத் தொந்தரவு ( :))) தாங்க முடியலை.

அதுல இருந்து விடுபட, இந்த ப்ளாக்-ல நாம கேட்ட,கற்ற, சுட்ட ரெசிப்பிக்களை போட்டு, லிங்க்- கொடுத்து, வேணுங்கிறப்ப பாத்து பண்ணிக்கோங்கடான்னு சொல்லிரலாம் பாருங்க..

அதுக்குத்தான் இது... நீங்க கூட ரெசிப்பி அனுப்பலாம்..

செய்ஞ்சு பாத்துட்டு, கருத்தோட உங்க பெயர் விளங்கச் செய்வேனுங்கோவ்!

Be Ready! (இப்படி சொன்னா, நம்ம பாசக்கார பயலுவ.. பீர் அடிக்கச் சொல்றாருன்னுட்டு பாட்டில ஓப்பன் பண்ணப் போயிடுவானுங்க, நான் சொன்னது அந்த அர்த்ததில இல்லைங்கண்ணு, தயாரா இருங்கன்னு சொல்லுக்கினு, இப்ப ஜகா வாங்கிக்கிறேன்.

Thursday, April 26, 2007

எஜிடேரியன்??

மறுநாள் காலையில எழுந்திருக்கிறப்பவே வீடு பார்க்கணும்ங்கிற நினைப்பு மனசில தட்டுச்சு.

லேசா வளர்ந்திருந்த தாடியை எல்லாம் ஷேவ் செய்து, ட்ரிம்-ஆனேன். தாடியோட பாத்தா ரவுடின்னு நினைச்சுரக் கூடாதில்ல. பக்காவா டிரஸ் பண்ணிகிட்டு ஆபிஸ் போனேன்.

சரியா பதினொறு மணிக்கு டாண்-னு போன் பண்ணிட்டார் புரோக்கர், நம்ம டிவிஎஸ்-50 ஐ எடுத்துகிட்டு, அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேசனுக்கு ரொம்ப பக்கம், வெஸ்ட் மாம்பலம் மார்கட்டுக்கு பக்கத்திலேயே..


வீடும் புடிச்சுப் போச்சு. லாட்ஜ விடநூறு மடங்கு மேல். சரின்னுட்டு ஓனரப் பார்க்கப் போனோம். ஓனரு வீடு பக்கத்து தெருவுல இருந்தது. அதுவும் சொந்தவூடுதானாம், புரோக்கர் சொன்னான்.

'என்னப்பா வீடு புடிச்சிருக்கா' - ஓனரம்மா கேட்டாங்க.

'ஆமாங்க. என்ன வாடகை, எப்பத்தில இருந்து வரலாம்னு சொன்னீங்கன்னா, நல்லாருக்கும்'னேன்.

'இருப்பா.. பேச்சிலரின்னு சொல்லிக்கினு கீர.. கவிச்சி எல்லாம் தும்பியா'ன்னாங்க.

'கவிச்சின்னா..' -ன்னு இழுத்தபடியே புரோக்கரைப் பார்த்தேன்.

'அட என்னாப்பா கவிச்சின்னா முழிக்கிற, மாமிசம் துன்னுவியான்றாங்கோ' ன்னான்.

'நான் சாப்பிட மாட்டேனுங்க...ஆனா ரூம் மேட்டு சாப்பிடுவாருங்க' ன்னேன்.

'என்னாப்பா புரோக்கரு, இந்தப் புள்ளயாண்டான் கவிச்சி திம்பேங்கிறான், பக்கத்துல அய்யமாருங்கோ இருக்காங்க, மாமிசம் திங்காத பார்ட்டிய இஸ்துக்கினு வான்னா, இத்த கூட்டியாந்திருக்க..'ன்னு புரோக்கர்ட்ட சொல்லிட்டு,

'இந்தா பாரு தம்பி, நாங்களும் மாமிசம் துன்னுறோவங்கதான், அது எங்க சொந்த வீடுதான், அய்யமாருங்கல்லாம் பக்கத்துல இருக்காங்க கவிச்சி சமைச்சு கஷ்டப்படுத்த வேணாம்னுட்டு, நாங்க இந்த வீட்டுல வந்து இருக்கோம், நீ வேற வூடு பாத்துக்கோ'ன்னுட்டாங்க.

'இல்லங்க...நான்...' அப்படின்னு இழுத்து முடிக்கிறதுக்குள்ள, அந்த அம்மா கறாரா முடியாதுன்னுருச்சு.

புரோக்கர் என்னப் பாத்து முறைக்க, நடையைக் கட்டினோம். 'என்னா சார் நீ, இப்படி கவுத்திட்ட, சாப்பிட மாட்டேனு சொல்லிட்டு அப்புறம் போய் சமைச்சி சாப்பிடேன்.. யாரு கேக்கப்போறா'ன்னான்.

'அட போப்பா, அப்புறம் வீட்ட காலி பண்ணச் சொல்லிட்டு, அட்வான்ச தராம தகராறு பண்ணினா..உன்ன எங்க வந்து புடிக்க' ன்னு பதில் சொல்லிட்டு ஏமாற்றத்தோட ஆபிசுக்குப் போய்ச்சேர்ந்தேன்.

ம்ம்ம்...அவ்வளவுதான்..நம்ம வயிறுக்கு ஓட்டலு சாப்பாடுதான் போலன்னு நினைச்சுகிட்டேன்.

சாயந்திரம் ஒரு நாலு மணியிருக்கும், எதிர் ரூம்மேட் அசோக்-கிட்ட இருந்து போன்.

'என்னாப்பா நீ..உன்ன போன் பண்ணச் சொன்னேன்..மறந்துட்ட.. இப்பதான் என் கலிக் சொன்னான், டி.நகர்ல வீடு காலியா இருக்காம், ஒரே ரும், வித் கிச்சன் & பாத்ரூம். ஓகேவா..800 ரூபா வாடகை கேக்குறாங்க'

'பரவாயில்ல பாஸ்.. லாட்ஜ்-ல காமன் டாய்லட்/பாத்ரூமுக்கு எவ்வளவோ பரவாயில்ல..ஆனா, நான் வெஜ் சமைக்கக் கூடாதும்பாங்கள்ளா'ன்னு இழுக்க,

'அவங்க நான் வெஜிடேரியன் இல்ல, எஜிடேரியன்..முட்டை மட்டும்தான் சாப்பிடுவாங்க..நான் வெஜ்-லாம் சமைக்க மாட்டாங்க, வேணுன்னா ஓட்டல்ல சாப்பிட்டுக்குவாங்க-ன்னு சொல்லி வச்சிருக்கேன். அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க பாஸ்' அப்படின்னாரு.

'என்ன பாஸ்..அவரு ரூம் மேட்டு..'

'அட நீங்கவேற.. நீங்க எல்லா உண்மையையும் சொல்லிக்கிட்டு வீடு தேடினா, ஒரு பய உங்களுக்கு வீடு தரமாட்டான்..முதல்ல உள்ள போய் உக்காருங்க..அப்புறம் இடம் பார்த்து நடந்துக்கோங்கய்யா'ன்னார்.

ம்..மெட்ராசு வந்து பல வருசம் ஆனவரு..விவரமான ஆளுதான்..மனசுல நினைச்சுகிட்டேன்.

'சரி பாஸ்..வீக் எண்ட் போய் அட்வான்ச கொடுத்திருங்க' அப்படின்னார்.

'அட..நாளைக்கே போய் எல்லாம் கொடுத்துடுறேன், அப்புறம் மனசு மாறிடப் போறாங்க..'

'சரி நீங்களே பேசிக்கோங்க...அப்படின்னுட்டு நம்பர் கொடுத்தார்.

அப்பவே வீடு கிடைச்சா மாதிரி சந்தோசம், உடனே கூப்பிட்டு பேசி, மறுநாள் போய்ப் பார்த்து, 'பேச்சிலர்க்கு வீடு கொடுக்கோம், பேரக் காப்பாத்து தம்பி'ன்னாங்க.

சரிங்கோ-ன்னுட்டு வூடு புக ரெடியானோம்!

பாத்திர பண்டங்கள் எல்லாம் வாங்கி, சமையலுக்கான முன்னேற்பாடோட கிச்சன எல்லாம் ரெடி பண்ணினோம்.

ரங்கநாதன் தெருவில இருந்த ஒரு புத்தகக் கடையில 'மல்லிகா பத்ரிநாத்'- எழுதுன சில சமையல் புத்தகங்களும் வாங்கிக்கிட்டோம்..

அது ஒரு கனாக்காலம் மாதிரி, சமைச்சு சாப்பிடுற கனவோட தூங்கப் போனோம்.

Tuesday, April 24, 2007

வீடு கிடைச்சுதா?

எப்படியோ ரூம் மேட்டுகிட்ட ஒரு வாரம் டைம் வாங்கியாச்சு. அதுக்குள்ள வீடு கிடைக்கணுமே! மெட்ராசு ஊரில பேச்சிலர் பசங்களுக்கு வீடு கிடைக்கிறதுன்னா, குதிரை கொம்புதானுங்க.

வீடு வச்சிருக்கிற ஓனரு பசங்க பேச்சிலரா இன்னொரு ஊரில வூடு கிடைக்காம திண்டாடினா புரிஞ்சிப்பாங்களா?ன்னு எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.

நாலு நாளு புரோக்கருக்கு போன் போட்டு பேசின செலவுதானே தவிர, வீடு ஒன்னும் கிடைக்கிற மாதிரி தெரியல.

ரூம் மேட்டு, ஆபிசு வேலையா பெங்களூருக்குப் போனவரு, அங்கிருந்து 'என்னலே, வூடு கிடைச்சுதா?' ன்னு கேட்டாரு. 'ம்ம்ம்னு இழுத்தேன்.

'இன்னும் மூணு நாளுதாம்ல இருக்கு. அதுக்குள்ள கிடைக்கலேன்னா, லாட்ஜுக்கு அடுத்த மாச வாடகை அட்வான்சா குடுக்கோணும், பாத்துக்கோ'ன்னுட்டு போன வச்சுட்டாரு.

அவரு வச்ச உடனே, புரோக்கரப் போனப் போட்டு புடிச்சேன். 'என்ன புரோக்கரு நீ..ஒரு வீடு பாத்து தரமுடியல. நூறூ ருபா டோக்கன் அட்வான்ச் மட்டும் வாங்கிக் கிட்ட'ன்னு தாறுமாறா கேக்க ஆரம்பிச்சேன்.

'அண்ணே கோச்சுகிடாதீக, நாளைக்கு 11.00 மணிக்கு, வெஸ்ட் மாம்பழத்துல ஒரு வீட்ட முடிச்சிரலாம், எல்லாம் பேசிட்டேன் நான்', அப்படின்னான்.

'மவன..நாளைக்கும் எதாவது கத சொன்ன, உனக்கு இருக்குடி' அப்படின்னு முனகிட்டே போன வச்சேன்.

'என்னா பாஸ்..முணுமுணுக்கிறீங்க' - அப்படின்னு கேட்டுகிட்டே தோளைத் தட்டினாரு, எதிர்த்த ரூம் நண்பர் அசோக்.

'இல்ல சார், வீடு பாத்து போகலாம்னு, நானும், ரூம்மேட்டும் முடிவு பண்ணினோம், ஆனா ஒன்னும் தகைய மாட்டேங்குது, அதான் புரோக்கர் பயகிட்ட திட்டினேன்'

'ஓ..அப்படியா..உங்க ரூம்மேட்டு போனவாரம் எங்கிட்ட கூட கேட்டாருன்னுட்டு, என்னோட கலிக்-கிட்ட சொன்னேன். அவரோட மாமாவோட ஒரு வீடு இருக்கிறதா சொன்னாரு. எதுக்கும் நீங்க எனக்கு நாளைக்குக் காலையில போன் பண்ணுங்க. நான் கேட்டுச்சொல்றேன்' னார்.

'சூப்பருங்க, கண்டிப்பா பண்றேன்'-னு சொல்லிகிட்டே சக லாட்ஜ் நண்பர்களைப் பார்க்கப் போனோம்.

'நாளைக்கு' என்ன நடந்ததுங்கிறத, நாளைக்குச் சொல்லட்டுமாங்கோ?

அட சாப்பாட்டு ராமா?

பேச்சிலரா இருந்து, சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற அனுபவம் இருக்கே.. அது ஒரு ஜாலியான சோகம்ங்க. சும்மாச் சும்மா ஓட்டலுக்குப் போயி, என்னத்தச் சாப்பிடன்னு யோசிச்சு, கடைசியில பொங்கல் வடை, மசால் தோசைன்னே காலம் போய்கிட்டு இருந்துச்சு.

அப்பதான், திடிர்னு ஒரு ஞானோதயம் வந்துச்சு. எதுக்குடா இப்படி லாட்ஜில தங்கிக்கிட்டு, ஓட்டலுக்கும் தண்டம் அழுது லாட்ஜுக்கும் தண்டம் அழுது, நாளக் கடத்திக்கிட்டு இருக்கிறதுக்கு, ஒரு வீடு பார்த்து, சமைச்சு சாப்பிட ஆரம்பிக்கலாம்னு திட்டம் போட்டோம்.

வீடு பார்க்கிறது அவ்வளவு சுலபமில்லையே. பேச்சிலர்-னா எவன் வீடு கொடுப்பான்கிற கதையாப் போயிடுச்சு. தேடு தேடுன்னு தேட ஆரம்பிச்சோம்.

நம்ம ரூம் மேட்டு, ரொம்ப டென்சனாயிட்டாரு. அவருக்கு எதுவுமே எடுத்தவுடனே நடக்கணும், இவ்வளவு இழுஇழுத்துதா..மனுசன் கோவமாயிட்டாரு..

'அட சாப்பாட்டு ராமா... உன் வயிறுக்காக இவ்வளவு கஷ்டப்பட முடியாதுடா'ன்னுட்டு இழுக்க ஆரம்பிச்சார்.

சரிடா மச்சி.. இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம், அதுக்குள்ள கிடைக்கலேன்னா, ஐடியாவ டிராப் பண்ணிரலாம்னு முடிவெடுத்தோம்.

வீடு கிடைச்சுதா... கொஞ்சம் வெயிட் செய்யண்டி..அடுத்தப் பதிவுக்கு!