Wednesday, May 14, 2008

வாழப்பூ..இல்லீங்க..PIT - ஜோடிப்பூ


என்னமோ காலிப் பிளவரு, வாழப்பூவ வச்சு கத எழுதிகிட்டு இருக்கிறவ(ன்), திடீர்னு 'பிட்'டுக்கு எல்லாம் காப்பி அடிக்க ஆரம்பிச்சுட்டனேன்னு நினைக்கிறீயளா.. புரியுது..புரியுது...

நாம பண்ணிப் போடுற சாப்பாட சாப்பிடுற நம்ம தம்பிப் பயலுவ, நம்மள ஊக்குவிச்சு, அங்க இங்க போறப்ப எடுத்த பூவ போட ஐடியா கொடுத்தானுவ.. எதுக்குடா இவ்வளவு பாசமா இருக்கிறீக-ன்னு கேட்டாக்க, 'அட..உமக்கு பரிசு கிடைக்காட்டியும், இத்த வச்சுகிட்டு ரெண்டு மூணுபேரு உங்க ப்ளாக்க படிப்பாக...புதுசா ஏதாவது நல்ல ரெசிப்பீயக் கொடுப்பாக...அரச்ச மாவ அரைக்கிற மாதிரி ஒரே மாதிரி சமையல செய்ஞ்சுகிட்டு இருக்கிறவிட்டுட்டு, அத்த வச்சுகிட்டு புதுசா ஏதாவது பண்ணுவீகள்ளா..உமக்கும் விளம்பரம் கிடைக்கும்', அப்படிங்கிறான்...


என்னவோ, சும்மானாச்சும் கோதாவுல குதிக்கலாம்னு.. எப்படி மக்கா?

செயிச்சுட்டம்னா, பசங்க 'ட்ரீட்' தர்ரேன்னுருக்கானுவ, ஒரு நாள் சமையலுக்கு லீவு விட்டுருவேன்..


Monday, May 12, 2008

சொதி சாப்புடுறீயளா?

'ஏலா முத்தம்மா..உம் மனசு எம்புட்டு..எங்கிட்டதான் காட்டுடியம்மா' -ன்னு பாடுற திருநெவேலி ஊருக்கு பேமஸு இந்தச் சொதிங்கிறது. இதப்பத்திச் சொன்னோமுன்னா, நம்ம பாசக்கார பயலுவ, 'எலே அண்ணாச்சி...சொதி..கிதின்னுட்டு எதையாவது பண்ணிவிட்டு, விவகாரமாக்கிப் புடாதியும்'-ன்னு எச்சரிக்கிறானுவ.

அட போங்கடா.. அண்ணாச்சி 'சொதிய பண்ணிக் காட்டுறேன், சாப்புட்டுப் பாத்துச் சொல்லுங்கடே' ன்னு சவால உட்டுப்புட்டு சொதி பண்ணி வச்சிருக்கேன்.. பய புள்ளக இன்னமும் சாப்பிட்டுப் பாக்கல.. பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லப் போறானுவளோ, அதுக்கு முன்னாடி உங்களுக்கும் அந்த சமையல் குறிப்பை கொடுத்துரலாம்லா.. அதான் இங்க வந்துருக்கேன்.

குறிச்சுக்கீறியளா? நாலு பேருக்குச் சமைகிறமாதிரி அளவுங்க, உங்க கூட்டத்துக்கு ஏத்தா மாதிரி ஏத்தி/இறக்கி போட்டுக்கோங்க..தேவையானப் பொருட்கள்
-----------------------------------

கேரட் - 4, (Medium size)

உருளைக்கிழங்கு - 4, (Medium Size)
முருங்கைக் காய் - 1,
பீன்ஸ் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 4, (Medium Size)
பச்சை மிளகாய் - 6,
தக்காளி - 2,
எலுமிச்சம் பழம் -1,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,

தேங்காய் - 1 நல்ல பெரிசா இருக்கட்டும், (வெளி நாட்டில தேங்காய்ப் பால் டின் கிடைக்கும், அதுன்னா 1 டின் போதும்)
சீரகம் - 1 தேக்கரண்டி,
பூண்டு - 10 பல், (பூண்டு வாசம் புடிக்காதுன்னா, அதிகம் போட வேண்டாம்)
உப்பு - தேவையான அளவு,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 15,
எண்ணெய் - 3 ஸ்பூன்

ரெடி பண்ணிக்கோங்க
 • முதல்ல தேங்காயை உடைச்சு திருகி, பால் எடுத்துக்கவும். இது முதல் தேங்காய்ப் பால்.
 • தேங்காய் பால் எடுத்த பின்னாடி, இருக்கிற சக்கையை திரும்ப தண்ணி விட்டு, மீண்டும் மிக்ஸியில போட்டு அடிச்சு, பால் எடுத்துக்கவும். இது இரண்டாவது தேங்காய்ப் பால் (பேச்சுலர்ஸுக்கு சோம்பலா இருந்தா, அப்படியே வச்சுக்கலாம். :))
 • காய்கறிய மீடியமா நறுக்கி வச்சுக்கோங்க, வெங்காயத்தையும் தான்.
 • சீரகம் மிளகாய மிக்ஸியில போட்டு அரைச்சு வச்சுக்கோங்க
 • பூண்டு நறுக்கியும் போடலாம், அல்லது அரைச்சு விழுதாயும் போடலாம். விழுதாக்கிப் போட்டா பூண்டு வாசனை அதிகமாய்ச் சேரும், பூண்டு காரமும் குழம்பில் சேரும். எப்படி வேணுமோ அப்படி தயார் பண்ணிக்கவும்.

செய்முறை

 • அடுப்பப் பத்த வச்சு பெரிய வாய் அகன்ற பாத்திரத்த வையுங்க.
 • கொஞ்சம் எண்ணெய் விட்டுச் சூடு பண்ணவும். (நெய் நல்லாயிருக்காது)
 • சூடான பின்னாடி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
 • இரண்டாம் தேங்காய்ப் பாலை அதில விட்டு, கொஞ்சம் மஞ்சளும், தண்ணியும் சேர்த்து கொதிக்க விடவும். மிதமான கொதியலில், நறுக்கி வச்சுருக்கிற காய்கறியப் போட்டு, வெங்காயத்தையும் போட்டு வேக விடவும். (பூண்டு விழுதாய் இல்லாமல், நறுக்கிய பாங்காய் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும்)
 • ஒரளவுக்கு மிதமா வெந்த பின்னாடி, மிளகாய் & சீரகம் அரைச்ச கலவையை விட்டு நன்கு கொதிக்க விடவும்.
 • அரைத்த பூண்டு விழுதாய் இருந்தால், காய்கறி நன்கு வெந்தவுடன் பூண்டு அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
 • நன்கு கொதித்து வெந்தவுடன், முதல் பாலை இப்போது சேர்த்து சிறிது நேரம் மிகமிக மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
 • அதன் பிறகு எழுமிச்சைச் சாற்றினை அதில் விட்டு வேண்டிய அளவு கொத்தமல்லி இலையும் சேர்த்து, அடுப்பை அணைத்து, அடுப்புக் காந்தலில் விடவும்.

சொதிய சாம்பார், புளிக் குளம்பு மாதிரி விட்டுச் சாப்பிட்டா டேஸ்ட் இருக்காது, சும்மா ரசம் மாதிரி ஓட ஓட இந்தச் சொதியினை சற்றே இளஞ்சூட்டில், சூடான சாதத்துடன், விட்டு சாப்பிட்டீங்கன்னா, மதியம் தூக்கம் போட ரொம்ப வசதியாய் இருக்கும்.

தேங்காய வாங்கி பால எடுத்து பண்ணுறது, வேலை ரொம்ப ஆகும், அதுக்கு சும்மா டின் தேங்காய்ப் பால வச்சுக் கூட பண்ணலாம், வேலை சுளுவா முடிஞ்சுடும். செய்ஞ்சு பாத்துட்ட்சு சொல்லுங்க, என்னா?